Posts

சீரான உடம்பிற்கு தேவையான சீரக பொடி செய்வது எப்படி?

சீர் + அகம் (உடல்) = சீரகம் என்று சொல்வார்கள். வெளி உடம்பை அழகாக்க பலவித பௌடர்களை போடும் நாம்  உள் உடம்பை பாதுகாக்க இந்த பொடியை கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை செய்வது மிகவும் எளிது. எவ்வளவு பொடி தேவையோ அந்த அளவு அல்லது குறைந்தது ஒரு 100 கிராமாவது சீரகத்தை வாங்கி வெய்யிலில் காய  வைத்து எண்ணை விடாமல் வாசனை வரும் வரை வறுத்து ஆறியவுடன்  மிக்சியில் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு  வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். சப்பாத்திக்கு செய்யும் எல்லா சைடு டிஷ்களிலும் சீரக பொடி சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கூடும். லஸ்ஸி, நீர் மோர் வகைகளுக்கும் ஏற்றது.  சாட் வகைகளில் சேர்க்கப்படும் ஸ்வீட் சட்னிகளில் நிச்சயம் இதை சேர்க்க வேண்டும்.  அப்போதுதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாகிவிடும். 

வெருசெனேக பொடி (வேர்கடலை கொப்பரை பொடி)

ஆந்திராவிலிருந்து நம்மூருக்கு வந்திருக்கும் அருமையான பொடி இது.   இதற்கு தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - ௨ கப் ஜீரகம் - ௨ டீஸ்பூன்  மிளகாய் வற்றல் - 8  கொப்பரை - அரை மூடி (உலர்ந்த தேங்காய்) பூண்டு   பல்     -  15  நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  கருவேப்பிலை  -  சிறிதளவு  உப்பு            - தேவைக்கேற்ப  செய்முறை : முதலில் வேர்க்கடலையை எண்ணையில்லாமல் வறுக்கவும். சிறிது ஆறியவுடன் கைகளின் நடுவில் வைத்து தேய்த்தால்  வேர்க்கடலையின் மேல் தோல் தனியாக வரும், அதை நீக்கி விடவேண்டும். பின்னர் அதே வாணலியில் எண்ணை விட்டு  மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.   பின்னர் மிக்சியில்  வேர்க்கடலையோடு சேர்த்துப் பொடித்து ஒரு ப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.   சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. 

கொள்ளு பருப்பு பொடி செய்வது எப்படி?

கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்று சொல்வார்கள். உடல் இளைப்பதற்கு கொள்ளு உண்பது மிகவும் நல்லது.  எந்த வித பக்க விளைவும் இல்லாமல் உடம்பை இளைக்க வைப்பது கொள்ளு ஒன்று தான்.   சரி கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்:  கொள்ளு - 1 கப் மிளகாய் வற்றல் - 5  - 10 ((கொள்ளு அளவிற்கேற்றவாறு) பெருங்காயம்     -  ஒரு சிறு துண்டு (கட்டியாக இருந்தால்)  உப்பு - தேவைக்கேற்ப  உப்பை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக வாணலியில் எண்ணை விடாமல் வறுத்துக்கொள்ளவும்.  பின்னர் நன்கு ஆறியவுடன் உப்பையும் சேர்த்து வைத்து மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகிக்கலாம்.  நல்ல சூடான சதத்தில் நெய்யோ நல்லெண்ணையோ விட்டு இந்த பொடியை தேவையான அளவு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உடம்பில் தேவையற்ற கொழுப்பு குறைந்து அழகும் கூடும். 

கொள்ளை மணம் தரும் தனியா பொடி செய்வது எப்படி?

எந்த ஒரு சைடு டிஷ் ஆக இருந்தாலும் அதில் தனியா பொடி இருந்தால் அதன் சுவையே தனி தான். இதை செய்வது ரொம்ப ஈசி.  நல்ல உருண்டையான ஓட்டை இல்லாத தனியாவை வாங்கி ஒரு இரண்டு நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும். பின்னர் இதை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்று முறை சலித்து கப்பியை திரும்பத் திரும்ப மிக்சியில் போட்டு அரைத்தால் நன்றாக பொடியாகிவிடும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் சப்பாத்திக்கு எந்த சைடு டிஷ் செய்தாலும் உபயோகப்படும். 

பட்டையைக் கிளப்பும் பிரியாணி செய்யத் தேவையான பட்டை பொடி செய்வது எப்படி?

பட்டை எல்லா கடைகளிலும் கிடைக்கும். ஆனால் இதன் மணமும் வீரியமும்  நாள் ஆக ஆக குறைந்து கொண்டே வரும். அதனால் இதை வாங்கியவுடனே பொடி செய்து வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. செய்முறை:  பட்டையை சிறு சிறு துண்டுகளாக ஒடித்து வெறும் வாணலியில் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.  இதை  சூப். மேரினேட்.  பிரியாணி. குருமா, கேக் மற்றும் காய்கறி ஸ்டூ தயாரிக்கும் போது கலந்தால் சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். 

வெரி குட் சாம்பார் செய்ய தேவையான வெந்தயப்பொடி செய்வது எப்படி?

சாம்பார் சுவைப்பதற்கு சாம்பார் பொடியில் கலந்திருக்கும் வெந்தயப்பொடி ஒரு முக்கிய காரணம்.  இதை தனியாக வைத்தும் உபயோகிக்கலாம்.  திடீர் சாம்பாருக்கு இது மிக அவசியம். இதை செய்வது மிகவும் சுலபம்.  ஒரு அரை கப் வெந்தயத்தை வாணலியில் போட்டு பிரவுன் கலராக மாறும் வரை வறுக்க வேண்டும்.  எண்ணெய் விட தேவையில்லை.  அதே போல் ரொம்ப கருப்பாக ஆகும் வரையும் வறுக்கத் தேவையில்லை. லைட் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் நன்கு ஆரியவுடன் மிக்சியில் மையாக அரைத்து ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கவும்.  தினமும் சாம்பார் செய்து முடித்து மூடி வைக்கும் முன்னர் அரை ஸ்பூன் வெந்தய பௌடரை சாம்பார் மேல் போட்டு ஒரு கலக்கு கலக்கி மூடி வைத்தால் சாம்பார் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் பசியையும்  தூண்டும். 

இட்லி மிளகாய் பொடி ஈஸியா செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு இட்லி தோசையுடன் பெரியவர்களைப்போல் மிளகாய் பொடி போட்டு சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.  அதனால் பல வீட்டில் சட்னி சாம்பாரோடு மிளகாய் பொடியும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:  உளுத்தம் பருப்பு : ஒரு கப் கடலை பருப்பு     : ஒரு கப் மிளகாய் வற்றல்: 20  - 40  (தேவையான அளவு) பெருங்காயம்      : ஒரு சின்ன ஸ்பூன் பொடியாக இருந்தால் (அல்லது) கட்டி பெருங்காயம் : ஒரு சின்ன துண்டு உப்பு : அவரவர் தேவைக்கேற்ப  செய்முறை:  எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக ஒரு ஸ்பூன் எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.  கட்டி பெருங்கயமாக இருந்தால் மட்டும் வறுக்கலாம் பொடியாக இருந்தால் அப்படியே போடலாம்.   சிறிது ஆறியவுடன் முதலில் மிளகாயையும் பின் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் கர கரப்பாக அரைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகப்படுத்தலாம்.  நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைக்கவும்.