கடைக்கு போகாமல் வீட்டிலேயே இட்லி மாவு தயாரிப்பது எப்படி?

இட்லி தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் சிறந்தது.  இதை தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களில் இருந்து தவழ்ந்து வரும் குழந்தைகள் மற்றும் தள்ளாடும்  தாத்தா பாட்டிகள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.  இந்த ஒன்று மட்டும் தான் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய அற்புதமான உணவு.  நீராவியில் வேக வைப்பதால் டயட்டில் இருப்பவர்கள் கூட டஜன் கணக்கில் சாப்பிடலாம். அவ்வளவு பாதுகாப்பானது. 
சரி இதை எப்படி செய்வது என்று பார்ப்போமா?  

இட்லி என்று நினைத்தவுடன் செய்து சாப்பிட முடியாது.  நாளை இட்லி சாப்பிட வேண்டும் என்றால் முதல் நாளே இதற்கான மாவு தயாரிக்க வேண்டும்.

மாவு தயாரிக்கும் முறை பின் வருமாறு:

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி  - ( I.R 20 அல்லது பொன்னி அரிசி) - 4 கப் 
முழு உளுந்து    -  1 கப் 
வெந்தயம்          -  1 டீஸ்பூன் 
உப்பு                    -   சுவைக்கேற்ப 

செய்முறை: 

அரிசி உளுந்து இரண்டையும் தனித்தனியாக தண்ணீரில்  6 மணியிலிருந்து 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். வெந்தயத்தை உளுந்தோடு சேர்த்து ஊற வைக்கலாம்.  பின்பு நன்றாக களைந்து சுத்தம் செய்து உளுந்தை மையாகவும் அரிசியை சிறிது கரகரப்பாகவும் அரைத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் தனி தனியாக அரைத்துக்கொள்ளவும்.  உளுந்தை முதலில் தண்ணீர் கொஞ்சமாக விட்டும் நன்கு மசிந்தவுடன் தண்ணீர் அதிகமாக விட்டும் அரைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு உயரமான பெரிய பாத்திரத்தில் கல் உப்பு தேவையான அளவு சேர்த்து இரண்டு மாவையும் விட்டு கையால் நன்றாக கலந்து வைத்து விட வேண்டும்.  கையால் கலப்பதால் மாவு சீக்கிரம் பொங்கி வரும் அதனால்   இட்லி மெத்தென்று பஞ்சு போல வரும். 

இப்படி கலந்த மாவை வெய்யில் காலமாக இருந்தால் 3 -4 மணி நேரமும் குளிர் காலமாக இருந்தால் 8 - 12 மணி நேரமும் புளிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த மாவை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். மறு நாள் இட்லி செய்வதற்கு முன் மாவை அறையின் வெப்ப நிலைக்கு கொண்டு வந்த பின்பே இட்லி செய்ய வேண்டும். 

மாவு எப்படி இட்லியாக மாறும்? 

இட்லி தட்டுகளை நன்றாக அலம்பி துடைத்து அதன் மேல் சிறிது நல்லெண்ணையை தடவி பின்பு இட்லி மாவை ஊற்ற வேண்டும். இட்லி தட்டுக்களில் உள்ள குழி முக்கால் அளவு வரை மாவு விட்டால் போதும் அப்போதுதான் இட்லி புஸ்சென்று மேலே எழும்பி அழகாக வரும். இந்த தட்டுக்களை குக்கரில் வைத்து மூட வேண்டும். விசில் போட வேண்டிய அவசியமில்லை. 10 அல்லது 20  நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். பின் சிறிது சூடு ஆரியவுடன் இட்லியின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூனால் எடுத்தால் தட்டில் சிறிது கூட ஒட்டாமல் அழகாக எடுக்க வரும்.   அவ்வளவுதான் இட்லி தயார்.

இதை சுடச்சுட மிளகாய் பொடியுடனோ பல வித சட்னி வைககளுடனோ சம்பாரோடோ சாப்பிடலாம். 

மறக்கக்கூடாத சில குறிப்புகள்: 

1 . அரிசி உளுந்தை க்ரைண்டரில்தான் அரைக்க வேண்டும்.

2 . இட்லி தட்டை குக்கரில் வைப்பதற்கு முன் குக்கரில் இரண்டு டம்ளர்   
      தண்ணீர் விட வேண்டும்.

3 . அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.

Comments